மட்டக்களப்பில் இடைத்தரகர்களின்றி நெல் கொள்வனவு; 6 மையங்களில் அரசின் நேரடி நடவடிக்கை.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலைக்கு இடைத்தரகர்களின் தலையீடு இன்றி நேரடியாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம், நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக முன்னெடுத்து வருகிறது.
இதற்காக தேவையான களஞ்சியசாலை வசதிகள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் மட்டக்களப்பு விவசாய அபிவிருத்திக்கான இணைப்பாளர் கி. திலகநாதன் தலைமையிலான குழு, நெல் கொள்வனவு நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து வருகிறது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜின் ஆலோசனையின் கீழ், மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாவட்ட விவசாயத் திணைக்களம் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபை இணைந்து கொள்வனவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளன.
இலுப்படிச்சேனை, வவுணதீவு, முள்ளாமுனை, மணல்பிட்டி, வெல்வாவெளி மற்றும் தும்பங்கேணி ஆகிய ஆறு பிரதான மையங்களில் நெல் களஞ்சியப்படுத்தல் மற்றும் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக 10 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பருவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 38,000 ஹெக்டேயர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுவரை 6,000 ஹெக்டேயரில் அறுவடை நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பகுதிகளில் அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நெல் கொள்வனவு மற்றும் களஞ்சியப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர் நிமல் ஏக்கநாயக்க, நெல் சந்தைப்படுத்தல் அதிகாரி வடிவேல் ரஜீதரன் மற்றும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர். சிவனேசன் ஆகியோர் ஒருங்கிணைத்து வருகின்றனர்.






