ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்; 2 கப்பல்களை பறிமுதல் செய்த ஈரான்.!!!
• 50 பேர் கைது – சட்டவிரோத எரிபொருள் கடத்தல் என குற்றச்சாட்டு.
ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் இரண்டு சிறிய கப்பல்களை பறிமுதல் செய்து 50 பேரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அரச ஊடகத் தகவலின்படி, கெஷ்ம் தீவு மற்றும் மினாப் பகுதிகளுக்கு அருகிலுள்ள ஈரானிய கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளின்போதே இந்தக் கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த கப்பல்கள் சட்டவிரோதமாக எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களை கடத்திச் சென்றதாக ஈரான் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈரானின் அரச செய்தி நிறுவனமான IRNA, செப்டம்பர் 28ஆம் திகதி வெளியிட்ட தகவலில், ஹார்மஸ்கான் மாகாண எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈரானின் கடலோரப் பகுதிகள் மற்றும் பிராந்திய கடற்பரப்பில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதன்படி, கெஷ்ம் மற்றும் மினாப் அருகிலுள்ள கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் எல்லை விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் 50 பேர் கைது செய்யப்பட்டதுடன், கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கப்பல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், பறிமுதல் செய்யப்பட்ட கப்பல்கள் எந்த நாட்டின் கொடியைக் கொண்டிருந்தன, அவற்றின் உரிமையாளர்கள் யார், கப்பல்களின் அளவு என்ன என்பது உள்ளிட்ட மேலதிக விபரங்களை ஈரான் இதுவரை வெளியிடவில்லை.
அத்துடன், கைது செய்யப்பட்ட 50 பேரும் குறித்த இரண்டு கப்பல்களின் பணியாளர்களா அல்லது தனித்தனி நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்டவர்களா என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை.
ஹார்முஸ் நீரிணையில் குறையும் கப்பல் போக்குவரத்து
உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில் ஏற்கனவே கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ஈரானுடனான மோதல் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராய்ட்டர்ஸ் தகவலின்படி, சமீபத்தில் ஒரு நாளில் இரண்டு சரக்கு கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் நீரிணையை கடந்துள்ளன. மோதலுக்கு முன்னர் சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 125 பெரிய வர்த்தகக் கப்பல்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மீதான கட்டுப்பாடுகளையும் ஈரான் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விதிகளை மீறியதாகக் கூறி இந்த மாத தொடக்கத்தில் மேலும் 11 கப்பல்கள் கட்டுப்படுத்தப்பட்ட கப்பல்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்திருந்தது. இதன் மூலம் அந்தப் பட்டியலில் உள்ள கப்பல்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
தொடரும் எரிபொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள்
சட்டவிரோத எரிபொருள் கடத்தலுக்கு எதிராக ஈரான் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதன் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
செப்டம்பர் தொடக்கத்தில் சுமார் 3.82 இலட்சம் லிட்டர் கடத்தல் எரிபொருள் இருந்ததாகக் கூறப்பட்ட ஒரு கப்பலை ஈரான் பறிமுதல் செய்து, 11 வெளிநாட்டு பணியாளர்களைக் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின.
அதேபோன்று, ஆகஸ்ட் மாதம் மினாப் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் 11 கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 9 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹார்முஸ் நீரிணை உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்துக்கு முக்கியமான கடல்வழிப் பாதையாக உள்ள நிலையில், அங்கு தொடரும் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சர்வதேச கப்பல் போக்குவரத்தில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.