மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னேற்றும் நோக்கில் மாவட்ட திட்டமிடல் குழுக் கூட்டம் இன்று (30) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் போது, மாவட்ட மக்களின் நீண்டகால பிரச்சினைகள் மற்றும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இதன்படி, மயிலத்தமடு மற்றும் மாதவணை பகுதிகளில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை மேய்ச்சல் நிலமாக அறிவித்து வர்த்தமானி வெளியிடுவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
அதேவேளை, முந்தானையாறு அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்துதல், கிரான் பாலம், பொண்டுகள்சேனை பாலம், மண்டூர் பாலம் மற்றும் பட்டிருப்பு பாலம் ஆகிய முக்கிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும், மண்டூர்–குருமன்வெளி, அம்பிளாந்துறை–குருக்கள்மடம், திகிலிவெட்டை–சந்திவெளி மற்றும் நரிப்புல்தோட்டம்–பாங்குடாவெளி பகுதிகளை இணைக்கும் நான்கு புதிய பாலங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இதனுடன், மனித–யானை மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், மட்டக்களப்பு வாவி பாதுகாப்பு, வாழைச்சேனை துறைமுக அபிவிருத்தி, மட்டக்களப்பு சிறைச்சாலையை இடமாற்றம் செய்தல் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விரிவுபடுத்துதல் போன்ற முக்கிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கும் திட்டங்கள் மற்றும் நெல் கொள்வனவு தொடர்பாக விவசாயிகள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கண்ட திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநிதன், கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


