பிரித்தானியாவில் விமானப்படை தளம் அருகே 5 பேர் கைது: பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக சந்தேகம்.!!!
பிரித்தானியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படையினரால் பயன்படுத்தப்படும் முக்கிய விமானப்படைத் தளமான RAF Fairford அருகே, பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
RAF Fairford விமானப்படைத் தளத்தை நோக்கி அதிகாலை வேளையில் மூன்று சந்தேகத்திற்கிடமான வான்களும் (Vans) பயணித்ததாக கிடைத்த அவசரத் தகவலையடுத்து, ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகத்திற்கிடமான ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் வெடிபொருட்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பின்னர் பயங்கரவாதச் சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ், பயங்கரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வாகனங்களை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக சம்பவம் இடம்பெற்ற பகுதியில் சுமார் 400 மீற்றர் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த சுமார் 85 வீடுகளில் வசித்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்க விமானப்படையின் பயன்பாட்டில் RAF Fairford
RAF Fairford விமானப்படைத் தளம் பிரித்தானியாவுக்குச் சொந்தமானதாக இருந்தாலும், பனிப்போர் கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமெரிக்க விமானப்படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் பாரிய பாதிப்பை ஏற்படுத்த முயன்றதாக அவர் குறிப்பிட்டதுடன், பிரித்தானியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்புக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை வழிநடத்தி வருகின்றனர்.
எனினும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் அல்லது வெளிநாட்டு தொடர்புகள் குறித்து காவல்துறையினர் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.