‘அர்னாப்’ சூறாவளியால் கடலில் காணாமல் போன நான்கு மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு.!!!
கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்த நான்கு கடற்றொழிலாளர்களும் இன்று (02) பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொத்துவில் கரையிலிருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில் குறித்த நான்கு மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நான்கு நாள் கடற்றொழில் பயணத்தை மேற்கொள்வதற்காக கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து குறித்த நான்கு மீனவர்களும் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, ‘அர்னாப்’ சூறாவளியின் தாக்கத்தினால் கடலில் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று காரணமாக, மீன்பிடிப் படகுக்கும் கரைக்கும் இடையிலான அனைத்து தொடர்பாடல் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன.
இதனால் குறித்த மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், இன்று அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.