சமூர்த்தி திட்டங்களை நீக்க முயன்றால் மக்களுடன் வீதிக்கிறங்கி போராடுவோம் – சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை.!!!
-நூருல் ஹுதா உமர்-
கடந்த ரணில் அரசில் நல்ல திட்டங்களை இல்லாதொழிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வஸ்ம திட்டத்தின் மூலம் மக்கள் பல கஷ்டங்களை சந்தித்தார்கள். அதைத்தான் இப்போது இந்த அரசாங்கமும் முன்னெடுக்கிறது. சமூர்த்தி சங்கங்களையும், சமூர்த்தி திட்டங்களையும் இல்லாதொழிக்கும் வேலைத்திட்டங்களை தொடர்ந்தால் சமூர்த்தி பயனாளிகளை ஒன்று திரட்டி நாங்கள் வீதிக்கிறங்கி இந்த அரசுக்கு முடிவு கட்டுவோம் என அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (19) அட்டாளைச்சேனை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்க தேசிய பொது செயலாளர், தேசிய பிரதி தலைவர், தேசிய பொருளாளர் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள்,
கடந்த அரசாங்கங்களில் சமூர்த்தி திட்டங்களை ஒழித்துக்கட்ட அரசாங்கங்கள் முன்வந்தபோது நாங்கள் பயனாளிகளுடன் இணைந்து நாங்களும் வீதிக்கு இறங்கி போராடினோம். தொடர்ந்தும் ஏழைமக்களின் பல மில்லியன் கணக்கான பணத்தையும், உரிமைகளையும் பாதுகாக்க நாங்கள் வீதிக்கு இறங்கி போராட தயாராக இருக்கிறோம். எதிர்காலத்தில் நாட்டிலுள்ள சமூர்த்தி பயனாளிகளை இணைத்து பலமான திட்டமாக சமூர்த்தி திட்டத்தை உருவாக்க தயாராக இருக்கிறோம்
சமூர்த்தி அபிவிருத்தி திட்டம் கடந்த 30 வருடங்களாக ஏழை மக்களின் துயர் துடைப்பதில் முன்னின்றிருக்கிறது. இந்த திட்டம் ஏழைகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை உருவாக்க உண்டாக்கப்பட்ட திட்டமாகும். இப்போது நாட்டை ஆளும் அரசாங்கத்தினர் கூட ஜனாதிபதி தேர்தல் கால தேர்தல் அறிக்கையில் இந்த திட்டத்தை பலப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தனர். இப்போது வாக்குறுதியை மீறி ஏழை மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.
தொழிற்சங்கங்களின் தயவுடன் அதிகாரத்துக்கு வந்த தற்போதைய ஆட்சியாளர்கள் தொழிற்சங்கங்களை முடக்கும் விதமாக செயற்படுகிறார்கள். சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கடந்த வார அறிக்கையின் பிரகாரம் சமூர்த்தி வங்கியை, சமூர்த்தி திணைக்களத்தை மூட அரசாங்கம் திட்டமிடுவதாக நாங்கள் அறிகிறோம். அரசின் இந்த யோசனையை வன்மையாக கண்டிக்கிறோம்.
அமைச்சர்கள் இந்த சமூர்த்தி திட்டத்தை மூட வேண்டும். சமூர்த்தி திணைக்களத்தை மூட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அதற்காகவே புதிதாக பொறுப்பேற்றுள்ள சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வேலை செய்கிறார்கள் இல்லை என்று இப்போது குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளார். ஏழை மக்களின் நலனுக்காக 30 வருடங்களுக்கு மேலாக சிறந்த முறையில் பணியாற்றி 400 பில்லியனுக்கு அதிகமாக சமூர்த்தி வங்கிசங்க இருப்பை நிலை நிறுத்தியுள்ளோம். வீட்டு சீட்டிழுப்பு மூலம் நிறைய பயனாளிகளுக்கு உதவியுள்ளோம். இப்படியான ஒரு திட்டத்தை இழுத்து மூட அரசாங்கம் முயல்கிறது. அதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதியளிக்க ம்,மாட்டோம். மக்களுடன் இணைந்து போராடுவோம் என்றனர்.





