கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு அவசியம் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி. வலியுறுத்தல்.!!!
கிழக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் கடற்கொள்ளை, தொழில் சுமை மற்றும் வி.எம்.எஸ். (VMS) கருவி தொடர்பான கட்டணப் பிரச்சினைகள் அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளதால், அவற்றுக்கு அரசாங்கம் அவசரமாக தீர்வு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றிய அவர், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் சுழற்சி முறையில் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் இத்தொழிலையே சார்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடலில் இடம்பெறும் மீன் திருட்டு மற்றும் கடற்கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஒரு முழுமையான வலைத் தொகுதியை வாங்க சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவாகுவதுடன், அதன் பராமரிப்புக்கே நாளொன்றுக்கு சுமார் 4,000 ரூபாய் வரை செலவாகிறது என அவர் சுட்டிக்காட்டினார். பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் இதுவரை நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மீனவர்களின் பாதுகாப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வி.எம்.எஸ். கருவி தற்போது அவர்களுக்கே பொருளாதாரச் சுமையாக மாறியுள்ளதாகவும், ஆரம்பத்தில் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட கருவிக்காக பின்னர் 35,000 முதல் 70,000 ரூபாய் வரை கட்டணங்களும், மாதாந்திரமாக 6,000 ரூபாய் சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், வி.எம்.எஸ். கருவி பொருத்தப்பட்ட பல படகுகள் மின்னல் தாக்கத்தால் சேதமடைந்துள்ளதாகவும், ஆல்டர்னேட்டர், மின்கலம் உள்ளிட்ட மின்சார அமைப்புகள் பாதிக்கப்பட்டதால் மீனவர்களுக்கு பல இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடலில் சிக்னல் துண்டிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் உரிய விசாரணை இன்றி கடலுக்குச் செல்லும் அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்படுவதாகவும், பழுதுபார்ப்பு என்ற பெயரில் தனியார் நிறுவனம் அதிக கட்டணங்களை அறவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, கானான் படகுகளுக்கு முன்னர் நடைமுறையில் இருந்த 14 நாள் அனுமதிப்பத்திர முறை நிறுத்தப்பட்டுள்ளதால், கச்சான் காற்றுக் காலத்தில் மீனவர்கள் தினமும் அலுவலகங்களுக்கு சென்று அனுமதிப்பத்திரம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களின் ஓய்வு நேரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, கடற்கொள்ளையர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், வி.எம்.எஸ். கருவிக்கான மாதாந்திர மற்றும் பழுதுபார்ப்புக் கட்டணங்களை குறைத்தல், மின்கலப் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் கானான் படகுகளுக்கான 14 நாள் அனுமதிப்பத்திர முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உடனடியாக விரிவான பதில் வழங்க இயலாத நிலையில் இருப்பதாகவும், அடுத்த பாராளுமன்ற அமர்வில் முழுமையான விளக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.