க.பொ.த. (சா/த) சாதனை மாணவிகளுக்கு பிரமாண்ட கௌரவமும்: காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் நடைப்பவனியும்.!!!
–எம்.ரி.எம்.யூனுஸ்–
அண்மையில் வெளியாகிய 2025 (2026) கல்வியாண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவிகளை கௌரவிக்கும் நடைப்பவனி இன்று (22) திங்கட்கிழமை காத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்றது.
மீரா பெரிய ஜும்மா பள்ளிவாசலிலிருந்து மட்/மம/ ஸாவியா மகளிர் வித்தியாலயம் வரை இடம்பெற்ற இந்த கௌரவ நடைப்பவனி, பாடசாலை அதிபர் அஸ்மியா றிஸ்வியின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அழககோன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் லத்தீப், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் நாசர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக, 2025 (2026) ஆம் ஆண்டில் க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளில் நான்கு பேர் 9A சித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ளதுடன். மேலும், 90 சதவீத மாணவிகள் உயர்தரக் கல்வியைத் தொடர்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.
இப்பாடசாலையில் 2024 ஆம் ஆண்டில் 75 சதவீதமாக இருந்த சித்தி வீதம், இம்முறை 90 சதவீதமாக உயர்ந்துள்ளமை பாடசாலையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
அத்துடன், காத்தான்குடிக் கல்விக் கோட்டத்தில் இரண்டாவது இடத்தையும், கல்வி வலய மட்டத்தில் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ள ஸாவியா மகளிர் வித்தியாலயம், பாடசாலை சமூகத்திற்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சிறப்பான அடைவுகளைப்பெற்ற மாணவிகளுக்கு அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பெற்றோர்களால் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






















