குருக்கள்மடம் மனித புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு: ஸ்கேன் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு.!!!
மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (26) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில், நீதிமன்ற உத்தரவின் பேரில் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் புதைகுழி அமைந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் நவீன தொழில்நுட்பமான “ஆடியோ ஃப்ரீக்வன்சி மேக்னடோ டெல்லூரிக்” முறைமையைப் பயன்படுத்தி ஸ்கேனிங் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அந்த ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இறுதி ஸ்கேன் அறிக்கை இன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாக ஆராய்ந்த நீதிமன்றம், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வழக்கை எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் திறந்த நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திலிருந்து திரும்பியவர்களில் சிலர் குருக்கள்மடம் பகுதியில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறி, “குரலற்றவர்கள்” அமைப்பு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இதனையடுத்து, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எவ்வித சான்றுப் பொருட்களும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வழக்காளர்களின் சொந்த செலவில் ஸ்கேனிங் பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அதன் இறுதி அறிக்கையே இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.