நிலாவெளி – புறாத்தீவு படகுச் சேவை மேம்படுத்த நடவடிக்கை:: அதிகாரிகள் கலந்துரையாடல்.!!!
நிலாவெளி – புறாத்தீவு படகுச் சேவை சங்க உரிமையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையிலான முக்கிய விசேட கலந்துரையாடல் இன்று (25) குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
குச்சவெளி பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயசுந்தர அவர்களின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர், குச்சவெளி பிரதேச வனஜீவராசிகள் திணைக்களப் பொறுப்பதிகாரி மற்றும் துறைசார்ந்த பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் காலங்களில் நிலாவெளி கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அங்கு நிலவும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுப்பதற்கான இருக்கைகள் மற்றும் நிழற்கூடாரங்களை அமைத்தல், கடற்கரைப் பகுதியில் மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்துதல், கழிவுப் பொருட்களை சேகரிக்க போதுமான குப்பைத் தொட்டிகளை நிறுவுதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், கடற்கரையில் சுற்றித் திரியும் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களால் ஏற்படும் இடையூறுகளை கட்டுப்படுத்துதல், வாகன தரிப்பிடங்களில் நிலவும் நெருக்கடிகளைச் சீர்செய்தல் மற்றும் கடற்கரை ஓரக் கடைகளின் ஒழுங்கமைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது அதிகாரிகள் இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் கேட்டறிந்து அவற்றை விரைவாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
மேலும், நிலாவெளி படகுச் சேவை சங்கத்தில் தற்போது நிலவி வரும் உள்ளகப் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன், நிலாவெளியை ஒரு முன்மாதிரியான சுற்றுலாத் தலமாக உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.






