காத்தான்குடியில் சுவர் இடிந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல்; ரூ.2 இலட்சம் நிதியுதவி வழங்கிய பள்ளிவாசல் நிர்வாகம்.!!!
-எம்.எஸ்.எம். நூர்தீன்-
புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் கடந்த ஜூலை 29ஆம் தேதி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கே. டிலெக்ஸன் என்பவரின் இல்லத்திற்கு புதிய காத்தான்குடி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவியும் வழங்கினர்.
உயிரிழந்த டிலெக்ஸன், வேலைவாய்ப்பு இன்றி இருந்த பட்டதாரி ஆவார். நிரந்தர வேலை இல்லாத காரணத்தால் பகுதி நேர தச்சு தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தார்.
சம்பவம் பள்ளிவாசல் எல்லைக்குள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பள்ளிவாசல் தலைவர் பாயில் தலைமையிலான நிர்வாகத்தினர் சனிக்கிழமை (01) மாலை அவரது இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவியை வழங்கினர்.
அதேவேளை, கட்டாரில் தொழில் புரியும் காத்தான்குடியைச் சேர்ந்த சுஜா தலைமையிலான Q Cargo நிறுவனமும், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவியை வழங்கியது.
இந்நிகழ்வில் புதிய காத்தான்குடி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் செயலாளர் யசீர் அரபாத் (B.A.), பள்ளிவாசல் இமாம் அல்-ஹாபிழ் மெளலவி முஸ்தகீம் பலாஹி, பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், Q Cargo நிறுவன அதிகாரிகள் மற்றும் சர்வமத செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அப்பகுதியிலுள்ள இந்து ஆலய குருக்கள், இன நல்லுறவு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் மனிதாபிமான முன்மாதிரி செயற்பாடாக இதனைப் பாராட்டியதுடன், புதிய காத்தான்குடி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சேவையையும் உயர்வாக மதிப்பிட்டனர்.













