கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தவிசாளர்.!!!
● காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமனம்.
கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள் இன்று (20) உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
நியமனத்தைத் தொடர்ந்து திருகோணமலையில் அமைந்துள்ள அதிகார சபையின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த புதிய தவிசாளர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு வரவேற்பளித்ததுடன், கிழக்கு மாகாணத்தின் பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக முதற்கட்ட கலந்துரையாடலும் நடைபெற்றது.
புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த பிர்தௌஸ் நளீமி, கிழக்கு மாகாண மக்களுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் அசௌகரியமற்ற பயணிகள் போக்குவரத்து சேவையை வழங்குவதற்கான புதிய திட்டங்களை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளராகவும், சுற்றாடல் அமைச்சின் மாவட்ட இணைப்பாளராகவும் பணியாற்றி வரும் அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி மற்றும் நலன்புரித் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தவிசாளரின் மக்கள் பணி வெற்றியடைய பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


