குற்றவாளிகளை கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்; சம்மாந்துறையில் பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் ஆரம்பம்.!!!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள், சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய விசேட பாதுகாப்பு ஸ்டிக்கர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மோட்டார் சைக்கிளுக்கும் பிரத்யேக அடையாள இலக்கம் கொண்ட பாதுகாப்பு ஸ்டிக்கர் வழங்கப்படுகிறது. அந்த இலக்கத்துடன் வாகன உரிமையாளரின் விபரங்கள், தொலைபேசி இலக்கம் மற்றும் எஞ்சின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் பொலிஸ் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
பொலிஸாரின் தெரிவிப்பின்படி, குற்றச்செயல் அல்லது விபத்து சம்பவங்களின் போது சிசிடிவி (CCTV) காட்சிகள் மூலம் ஸ்டிக்கர் இலக்கம் அடையாளம் காணப்பட்டால், இலங்கையின் எந்தப் பொலிஸ் நிலையத்திலிருந்தும் குறித்த வாகனத்தை உடனடியாகக் கண்டறிய முடியும்.
பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சமூகத்தில் குற்றச்செயல்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு, அம்பாறை மற்றும் கல்முனை பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை பல மோட்டார் சைக்கிள்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பதிவு செய்யாத வாகன உரிமையாளர்களும் தங்களது மோட்டார் சைக்கிள்களை விரைவில் பதிவு செய்து, இத்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சம்மாந்துறை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்னவின் பணிப்புரைக்கமையவும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமையவும், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் தலைமையில், போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஏ.டி.ஆர். விஜயவர்த்தன உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






