சம்மாந்துறை ஆயுள்வேத வைத்தியசாலையில் புதிய விடுதிக் கட்டிடம் திறப்பு; உள்நோயாளர் சேவை விரிவாக்கம்.!!!
நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வசதியை மேம்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் இன்று (12) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் டாக்டர் எம்.ஏ.எம். நஃபீல் தலைமையில் இடம்பெற்றது.
நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள சம்மாந்துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில், உள்நோயாளர் சிகிச்சை சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் புதிய விடுதி வசதிகளுடன் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜெயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய விடுதிக் கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் உலமாக்கள், பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் அப்துல் மஜீத், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், சம்மாந்துறை முச்சபை பிரமுகர்கள், பிரஜா சக்தி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், சம்மாந்துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய விடுதிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம், சம்மாந்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் ஆயுள்வேத சிகிச்சையைப் பெறுவதற்காக தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வசதி மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வசதி மூலம் நோயாளர்களுக்கான உள்நோயாளர் சிகிச்சை சேவையின் தரத்தை உயர்த்துவதுடன், கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கும் பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





