நரம்பியல் உலகையே மாற்றிய ஆப்டோஜெனெடிக்ஸ்; மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு.!!!
2026ஆம் ஆண்டுக்கான நோபல் உடலியல் அல்லது மருத்துவப் பரிசு மூன்று விஞ்ஞானிகளான கார்ல் டெய்செரோத் (Karl Deisseroth), பீட்டர் ஹெகெமான் (Peter Hegemann), ஜார்ஜ் நாகல் (Georg Nagel) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மூளையின் உள் செயல்பாடுகளை மிகத் துல்லியமாகப் புரிந்துகொள்ள உதவும் ஆப்டோஜெனெடிக்ஸ் (Optogenetics) எனப்படும் தொழில்நுட்பத்தை உருவாக்கி மேம்படுத்தியமைக்காக இவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.
ஒளியால் கட்டுப்படுத்தப்படும் ‘சுவிட்ச்’
ஆப்டோஜெனெடிக்ஸ் தொழில்நுட்பமானது, மூளையில் உள்ள குறிப்பிட்ட நரம்பு செல்களை ஒளியின் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சுவிட்ச் போன்று செயல்படுகிறது.
இதன் மூலம் மூளையின் எந்தெந்த செல்கள் குறிப்பிட்ட செயல்பாடுகளுக்குப் பொறுப்பாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து, அவற்றின் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்ய முடிகிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த பீட்டர் ஹெகெமான் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகியோர் பாசிகளில் காணப்படும் சேனல்ரோடாப்சின் (Channelrhodopsin) எனப்படும் ஒளி உணரும் புரதத்தைக் கண்டுபிடித்தனர்.
பின்னர் அமெரிக்க விஞ்ஞானியான கார்ல் டெய்செரோத், இந்தப் புரதத்தைப் பயன்படுத்தி நரம்பு செல்களின் செயல்பாடுகளை ஒளியின் மூலம் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கினார்.
நரம்பியல் அறிவியலில் புதிய திருப்பம்
இந்தக் கண்டுபிடிப்பு நரம்பியல் அறிவியலில் புதிய காலகட்டத்திற்கு அடித்தளமிட்டுள்ளதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நினைவுகள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் நரம்பியல் சுற்றமைப்புகளை ஒளியின் மூலம் துல்லியமாக ஆய்வு செய்ய இந்தத் தொழில்நுட்பம் விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.
மேலும், நரம்பியல் மற்றும் மனநலக் கோளாறுகளின் செயல்பாடுகளை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும் இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Clarivate நிறுவனத்தின் Institute for Scientific Information அமைப்பின் ஆய்வுப் பகுப்பாய்வுத் தலைவர் டேவிட் பென்டில்பரி, இந்த விருது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை விஞ்ஞானிகள் புரிந்துகொள்ளும் முறையை அடிப்படையாக மாற்றிய ஒரு துறையின் மிகப்பெரிய தாக்கத்தை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
ஒளியைப் பயன்படுத்தி மூளையின் நரம்பியல் செயல்பாடுகளை மிகத் துல்லியமாகக் கட்டுப்படுத்தவும் ஆய்வு செய்யவும் இந்தக் கண்டுபிடிப்பு வழிவகுத்துள்ளதுடன், நரம்பியல் அறிவியல் துறையையே மாற்றியமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.