உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

14 நாட்களுக்குள் காணிகளை காலி செய்ய உத்தரவு; வாழ்வாதாரம் பறிபோகும் அச்சத்தில் காரமுனை மக்கள்.!!!

-எஸ்.எம்.எம்.முர்ஷித்-

75 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக விவசாயம் மற்றும் குடியிருப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காரமுனை கிராமத்தைச்சேர்ந்த 14 முஸ்லிம் மேட்டு நிலப் பயிர்ச்செய்கையாளர்கள், 14 நாட்களுக்குள் (இம்மாதம் 30ம் திகதிக்குள்) அவர்களின் பூர்வீகக்காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு வாகரைப்பிரதேச செயலகம் விடுத்துள்ள உத்தரவு அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பதின்னான்கு நபர்கள் நேற்று 14.06.2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஓட்டமாவடியில் தனியார் விடுதியில் செய்தியாளர் மாநாடொன்றை நடாத்தினர்.

அதில் கலந்து கொண்டோர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலத்தை விட்டு வெளியேறுமாறு விடுக்கப்பட்டுள்ள இவ்வுத்தரவானது, தங்களின் அடிப்படை வாழ்வுரிமையைப்பறிக்கும் ஒரு பாரபட்சமான செயல் என காரமுனை அணைக்கட்டு விவசாய அமைப்பின் தலைவர் வீ.எம்.நபீர் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்,
வாகரைப்பிரதேச செயலாளரினால் ஒப்பமிட்டு காணிகளை விட்டு வெளியேறுமாறு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதானது காரமுனை மக்களுக்கு செய்யும் அநீதியாகவே கருத வேண்டியுள்ளது

காலங்காலமாக குடியிருந்த எங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்க அதிகாரிகள் உதவி செய்வதா? இல்லை எங்களைக் கஸ்டத்தில் தள்ளி விடுவதா?  எனக்கேள்வியெழுப்புகின்றனர்.

எங்கள் காணிக்கு 75 ஆண்டு கால வரலாற்றுப்பின்னணி உள்ளதாக தெரிவித்த பாதிக்கப்பட்ட விவசாயியான எம்.எம்.எம்.நுபைஸ்  தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்,

“இது எங்களுடைய வாப்பாவுடைய வாப்பா (பாட்டனார்) காலத்திலிருந்தே, அதாவது 1950ம் ஆண்டுக்கு முன்னிருந்தே எம்மவர்களால் துப்புரவு செய்யப்பட்டு, மேட்டு நிலப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலமாகும். கடந்தகால யுத்தச்சூழ்நிலை காரணமாகப் பல உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் சந்தித்து, உயிரைத்தப்ப வைத்துக் கொள்வதற்காகவே நாங்கள் தற்காலிகமாக இந்த இடத்தை விட்டு வெளியேறியிருந்தோம்.”

யுத்தம் முடிவுற்றதன் பின்னர் நாங்கள் மீண்டும் குடியேறிய போது எங்களுக்கான உரிமை மறுக்கப்படுகின்றது. எங்களிடமுள்ள பொறுளாதாரத்தை வைத்து மேலதிகமாக கடன்களை வாங்கி சோளான், கச்சான், பயறு போன்ற பயிர்களைச் செய்துள்ள போது திடீரென்று எங்கள் இடங்களை விட்டு வெளியேறு என்று கூறினால் நாங்கள் எங்கு செல்வது எனக்கேள்வியெழுப்பினார்.

எங்கள் மூதாதயருக்கு 1962 மற்றும் 1963ம் ஆண்டுகளில் வயல் காணிக்காக வழங்கப்பட்ட  அனுமதிப்பத்திரங்கள் இருந்த போதும், அப்போது இருந்த உதவி அரசாங்க அதிபர் காரியத்தால் அவைகள் திட்டமிட்டு மீண்டும் 1983ம் ஆண்டு காணிக்கான உறுதி வழங்குவதாக மீளப்பெறப்பட்டு இன்றுவரை வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகின்றோம்.

அது மாத்திரமல்ல, 1963ம் ஆண்டுக்குப்பின்னர் இன்று வரை வாகரை பிரதேச செயலகத்தினால் காரமுனை கிராமத்திலுள்ள ஒரு குடியிருப்பாளருக்குகூட காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாமல் அம்மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

211 மாங்கனி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள காரமுனை கிராமத்தில், 1950ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை மக்கள் செறிந்து வாழ்ந்தனர். பின்னர் 1990ல் ஏற்பட்ட பயங்கரவாத அசாதாரண சூழ்நிலையால் இடம்பெயர்ந்த நாங்கள் 2008ம் ஆண்டு மீண்டும் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பியிருந்தோம் எனத்தெரிவித்தனர்.

இழுத்தடிக்கப்படும் காணிக்கச்சேரியும், அதிகாரிகளின் அலட்சியமும்

சொந்த நிலங்களுக்குத் திரும்பிய மக்கள், தமக்கான காணி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக 2011ம் ஆண்டு முதன்முதலாகக் காணிக்கச்சேரிக்கு விண்ணப்பித்தனர்.

அதன் பின்னர் 2017ம் ஆண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, இதுவரை மூன்று கட்டங்களாகக் காணிக்கச்சேரி நடத்தப்பட்டுள்ளது.

2011 மற்றும் 2017ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட காணிக்கச்சேரியின் போது தமக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் தற்போது “இரத்துச் செய்யப்பட்டு விட்டதாக” பிரதேச செயலக அதிகாரிகள் கூறுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக 2025ம் ஆண்டு 11ம் மாதம் 13ம் திகதி காரமுனை விவசாய அமைப்பின் தலைவரும் பள்ளிவாசல் தலைவருமான முஹம்மது அஜ்மீர் மற்றும் சில விவசாயிகள் ஒன்றிணைந்து வாகரைப்பிரதேச செயலாளரிடம் கடிதமொன்றை ஒப்படைத்து நியாயம் கோரியுள்ளனர். எனினும், அதற்கும் எவ்விதப்பதிலும் கிடைக்கவில்லை.

காணி ஆணையாளரின் உத்தரவும் மீறப்பட்ட மனித உரிமைகளும்

பிரதேச செயலாளரின் மௌனத்தைத்தொடர்ந்து, மக்கள் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண காணி நிர்வாகத்திணைக்களத்தின் காணி ஆணையாளரைச்சந்தித்து முறையிட்டனர்.

இதனை ஆராய்ந்த காணி ஆணையாளர், கடந்த 2025 டிசம்பர் 24ம் திகதி வாகரை பிரதேச செயலாளருக்கு அவசரக்கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அதில், காரமுனை மக்களுக்கு உடனடியாகக் காணிக்கச்சேரியொன்றை நடத்தி, காணி ஆவணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் பிரதியொன்று மக்களுக்கும் வழங்கப்பட்டது.

இருப்பினும், காணி ஆணையாளரின் உத்தரவையும் புறந்தள்ளி, வாகரை பிரதேச செயலாளர் காரமுனை மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் மேட்டுநிலக்காணிகளுக்கு எவ்வித ஆதாரமுமில்லை எனக்கூறி, 14 மேட்டுநிலப்பயிர்ச்செய்கையாளர்களை உடனடியாக வெளியேறுமாறு கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடரும் அச்சுறுத்தல்களும் மக்களின் கோரிக்கையும்

2013ம் ஆண்டு இப்பகுதியின் சில பகுதிகள் “வாகனேரி ஒதுக்கக்காடு” என வர்த்தமானி (Gezette) மூலம் அடையாளப்படுத்தப்பட்டதையடுத்து, வனவளத் திணைக்களம் (Forest Department) ஒருபுறம் வழக்குத்தொடர, மறுபுறம் பிரதேச செயலகம் வெளியேற்ற உத்தரவு பிறப்பித்து தங்களை நெருக்குவாரத்திற்கு உள்ளாக்குவதாக மக்கள் வேதனைப்படுகின்றனர்.

எனினும், சுற்றாடல் அமைச்சு மற்றும் வனவளத் திணைக்களத்திடமிருந்து தங்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான சாதகமான கடிதங்கள் கிடைத்துள்ள நிலையிலும், வாகரைப்பிரதேச செயலகத்தின் காணி உத்தியோகத்தர் மனித உரிமை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, “இது வனப்பகுதி என்பதால் தம்மால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது” எனக்கூறி தட்டிக்கழித்துள்ளார்.

தற்போது பல ரூபாய் முதலீடு செய்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள நிலையிலும், இத்திடீர் வெளியேற்ற உத்தரவு அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றாக முடக்குவதாகவுள்ளது.

இதுவொரு தெளிவான மனித உரிமை மீறல் எனவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கெதிராகக் காட்டப்படும் பாரபட்சம் எனவும் தெரிவிக்கும் காரமுனை மக்கள், இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு, மாவட்ட அரசாங்க அதிபர் (GA), கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் நாட்டின் ஜனாதிபதி ஆகியோருக்கும் பல கோரிக்கைகளை அனுப்பியுள்ளனர்.

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மண்ணில், தங்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தி, நியாயமானதொரு தீர்வினைப் பெற்றுத்தர அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டுமென காரமுனை கிராம முஸ்லிம்கள் அவசரக்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884345

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time