புனித கஃபா கழுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில்: இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய – காத்தான்குடி தூதுவர் அமீர் அஜ்வத்.!!!
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவருமான ஓ. எல். அமீர் அஜீவத், மக்கா நகரிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெற்ற புனித கஃபா கழுவும் வருடாந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றுள்ளார்.
சவூதி அரேபியாவின் இரு புனிதத் தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல்அஜீஸ் அல் சவூத் மற்றும் கிரீடத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அல் சவூத் ஆகியோரின் விசேட அழைப்பின் பேரில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் இந்த அரிய நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.
இந்நிகழ்வில் பங்கேற்று புனித கஃபாவின் உட்பகுதிக்குள் நுழைந்த அனுபவம், தனது வாழ்நாளில் கிடைத்த மிக உயரிய ஆன்மீக பாக்கியங்களில் ஒன்றாகும் என தூதுவர் அமீர் அஜீவத் தெரிவித்துள்ளார்.
அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் காலம் முதல் தொடரும் இந்த பாரம்பரிய நிகழ்வின் போது, ஜம்ஜம் நீர், பன்னீர் மற்றும் ஊத், கஸ்தூரி உள்ளிட்ட உயர்தர நறுமணக் கலவைகள் பயன்படுத்தி கஃபாவின் உட்பகுதிகள் சுத்திகரிக்கப்பட்டன. இந்நிகழ்வு இஸ்லாமிய உலகில் மிகுந்த ஆன்மீக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இவ்வாறான உயரிய நிகழ்வில் பங்கேற்றமை, காத்தான்குடி மக்களுக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பல தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.