பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்; ஆகஸ்ட் 4 வரை நீதிமன்ற உத்தரவு.!!!
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்த ஐந்து கொலைச் சம்பவங்களிலும் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.