சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பை மீளாய்வு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்.!!!
சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக் கோரி இன்று (13) காலை திருகோணமலை உள்துறைமுக மாகாண சுகாதார அமைச்சின் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “நியாயமான ஆட்சேர்ப்பு வேண்டும்”, “அநுர ஆட்சியில் அநீதியா?”, “ஆட்சேர்ப்பில் முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்”, “தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமமான மற்றும் நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மத்திய அரசின் சுகாதார அமைச்சினால் சுகாதாரப் பணி உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போதிலும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும், எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி, தகுதியின் அடிப்படையில் வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், ஆட்சேர்ப்பு நடைமுறையை உடனடியாக மீளாய்வு செய்து சுயாதீன விசாரணை நடத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.






