புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்கள் பாவனைக்கு திறப்பு; கனரக வாகனங்களுக்கு தொடர்ந்தும் தடை.!!!
மட்டக்களப்பு நகரின் இரண்டாவது பிரதான பாலமாக விளங்கும் புதிய பாலம் உடைந்து சேதமடைந்ததைத் தொடர்ந்து அவசரமாக அமைக்கப்பட்ட தற்காலிக பாலம், இன்று (10) காலை 9.00 மணி முதல் பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் சுமார் ரூ. 3.5 மில்லியன் செலவில் இந்த தற்காலிக பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கடந்த (09) மாலை புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் வழமையான போக்குவரத்துக்காக பாலம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாலத்தைப் பயன்படுத்தும் பொதுமக்கள், அங்கு நிறுவப்பட்டுள்ள வீதி அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்றி, மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை, நிரந்தர புதிய பாலம் அமைக்கப்படும் வரை கனரக வாகனங்கள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், குறுகிய காலத்திலேயே பாலத்தைப் புனரமைத்து மக்களின் இயல்பான போக்குவரத்தை மீளக் கொண்டு வருவதற்காக இரவும் பகலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அரச அதிகாரிகள், பொறியியலாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச மக்களுக்கு, மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.












