காத்தான்குடியில் அஸ்வஸ்ம பயனாளிகளுக்கு சமுர்த்தி ரன்விமன வீடுகள் கையளிப்பு.!!!
சமுர்த்தி ரன்விமன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் பயனாளிகளிடம் இன்று (14) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் 10 இலட்சம் ரூபா நிதியுதவியுடனும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸக்காத் திட்டத்தின் ஊடாக 5 இலட்சம் ரூபா நிதிப் பங்களிப்புடனும், பயனாளிகள் மற்றும் தனவந்தர்களின் 7 இலட்சம் ரூபா பங்களிப்புடனும் மொத்தம் 22 இலட்சம் ரூபா செலவில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
167A புதிய காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ஆர்.எப். மிஸ்பா மற்றும் 167B புதிய காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ஏ. முஸாதிக்கா பேகம் ஆகிய இரு பயனாளிகளுக்குமே வீடுகள் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தயானந்தி திருச்செல்வம், கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளர் எம்.பீ.எம். பிர்தெளஸ் (நளீமி), சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.எப்.ஆர். பரீட், மீன்பிடி அமைச்சின் இணைப்பாளர் எம். நசீர், பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ.எல்.எம். பதுர்தீன் உள்ளிட்ட சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, தலா 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் இரு பயனாளிகளுக்கும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மற்றும் சொந்த வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் சமுர்த்தி ரன்விமன வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் இதுவரை மூன்று வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












