மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு: 4 கிராமிய வீதிகள் அபிவிருத்தி.!!!
-எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வீரமுனை-04, மலையடிக் கிராமம்-01, மலையடிக் கிராமம்-02 மற்றும் செந்நெல் கிராமம்-02 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், சுமார் 14 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நான்கு முக்கிய கிராமிய வீதிகளின் புனரமைப்புப் பணிகள் நேற்று (03) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் (RRDP) ஊடாக இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வீரமுனை-04 பிரிவிலுள்ள கோயில் 4ஆம் குறுக்கு வீதி, மலையடிக்கிராமம்-01 உக்கர் வீதி, மலையடிக்கிராமம்-02 முஸ்தாக் அலி வீதி மற்றும் செந்நெல் கிராமம்-02 ஆர்.டி.எஸ். வீதி ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
மேலும், சம்மாந்துறை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயற்றிட்டப் பொறுப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான வை.பி.எம். நவாஸ், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரீப், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.எம். முஸ்தபா, பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இப்புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், இப்பகுதி மக்களின் நீண்டகால போக்குவரத்து சிரமங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதுடன், பிரதேசத்தின் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.








