காத்தான்குடியில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம்: மரநடுகையும் முன்னெடுப்பு.!!!
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இம்மாதத்திற்கான பிரதான தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் இன்று (31) சனிக்கிழமை காலை புதிய காத்தான்குடி 167B கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பல்நோக்கு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, குறித்த வளாகத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த புற்கள் வெட்டி அகற்றப்பட்டு, சுற்றுச்சூழல் சுத்தம் செய்யப்பட்டதுடன், காத்தான்குடி மையவாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கன்சுல் சிஹானா, சமுர்த்தி வலய முகாமையாளர் முஸம்மில், பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மர்சூக்கா ரபீக், தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் நசீர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஆரிபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர்கள், விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை உறுப்பினர்கள் எனப் பலரும் இத்தூய்மைப்படுத்தல் பணியில் இணைந்து கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையான நகரை உருவாக்குவதன் அவசியம் தொடர்பிலும் இச்செயற்பாடு முக்கியத்துவம் பெற்றது.



