தங்க நகையை கண்டெடுத்தும் ஆசைப்படாத மாணவி; நேர்மைக்கு குவியும் பாராட்டு.!!!
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது மாணவி ஒருவரால் தவறவிடப்பட்ட பெறுமதியான தங்க நகை, அதனை கண்டெடுத்த மற்றுமொரு மாணவியின் நேர்மையான செயற்பாட்டினால் உரிய மாணவியிடம் இன்று (11) மீளக் கையளிக்கப்பட்டது.
ஜூலை 25ஆம் திகதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது பல்கலைக்கழக வளாகத்தில் கிடந்த பெறுமதியான தங்க நகையை, கலை கலாசார பீடத்தின் மொழித்துறையில் விசேட தரத்தில் கல்வி கற்றுவரும் வேருவலை, தர்கா நகரைச் சேர்ந்த எம்.ஏ.பி. அப்றா என்ற மாணவி கண்டெடுத்துள்ளார்.
கண்டெடுத்த நகையை எவ்வித தயக்கமுமின்றி பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஐ. பாத்திமா சப்னாவிடம் அவர் ஒப்படைத்துள்ளார். பின்னர் குறித்த நகை பல்கலைக்கழக பதிவாளரிடம் கையளிக்கப்பட்டதுடன், அதன் உரிமையாளரை அடையாளம் கண்டு நகையை மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து, குறித்த தங்க நகையின் உரிமையாளர் பொத்துவிலைச் சேர்ந்த மு.அ. பாத்திமா அன்பால் என அடையாளம் காணப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, இன்று (11) நடைபெற்ற விசேட நிகழ்வில் குறித்த தங்க நகை உரிய மாணவியிடம் உத்தியோகபூர்வமாக மீளக் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் எம்.ஐ. நௌபர், பிரதி பதிவாளர் எப். பாரிஷா எம். ஹசன், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ. அகமட் அஸ்ஹர், விரிவுரையாளர் எம்.ஐ. பாத்திமா சப்னா மற்றும் மாணவியின் தந்தை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நகையின் உரிமையாளரான மாணவி, தாம் தொலைத்த பெறுமதியான நகையை நேர்மையாகக் கண்டெடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைத்த எம்.ஏ.பி. அப்றாவுக்கும், அதனை உரியவரிடம் மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பதிவாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
பெறுமதியான பொருளைக் கண்டெடுத்த பின்னரும் அதனை தன்வசம் வைத்துக்கொள்ளாமல் உரிய நிர்வாகத்திடம் ஒப்படைத்த மாணவி அப்றாவின் செயற்பாடு, நேர்மை, பொறுப்பு மற்றும் மனிதநேயத்திற்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக பல்கலைக்கழக சமூகத்தினர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

