காத்தான்குடியில் புடவைக் கடையில் திடீர் தீ விபத்து: கடை முற்றாக எரிந்து நாசம்.!!!
-எம்.ரி.எம்.யூனுஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடையொன்றில் இன்று (20) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், குறித்த கடை முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது.
கடை உரிமையாளர் பகல் உணவிற்காக கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தீ பரவல் தொடர்பில் தகவல் அறிந்த காத்தான்குடி நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், பெருமளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ பரவல் காரணமாக காத்தான்குடி கடற்கரை வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதுடன், வாகனங்கள் மாற்று வழிகளை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















