பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் 3 சூறாவளிகள்; உலக நாடுகளுக்கு எச்சரிக்கை.!!!
உலகளாவிய ரீதியில் எல் நினோ தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், எல் நினோ உருவாகும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சூறாவளிகளால் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஹவாய் தீவுகளில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எல் நினோ தாக்கத்தின் பின்னணியில் இந்த ஆண்டு சீனாவைத் தாக்கிய 7ஆவது சூறாவளியாக ‘சௌடெலோர்’ (Soudelor) சூறாவளி பதிவாகியுள்ளதுடன், அது அந்நாட்டில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எல் நினோ தாக்கம் காரணமாக கொலம்பியாவில் மழைவீழ்ச்சி குறைந்து கடுமையான வறட்சி நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் வீடுகளுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த சில வாரங்களாக இந்தோனேசியா மற்றும் சுவிட்சர்லாந்தின் வனப்பகுதிகளில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளை பாதித்து வரும் எல் நினோ தாக்கம் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின்படி, நாட்டின் 7 மாவட்டங்களில் 35,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 115,534 பேர் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.