வீதிக்கு இடையூறாக இருந்த பட்டா வாகனம் அகற்றம்; உரிமையாளருக்கு தண்டப்பணம் விதித்த அதிகாரிகள்.!!!
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி B/2 பகுதியில் நீண்டகாலமாக வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா (Lorry) வாகனம், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இன்று (03) அகற்றப்பட்டதுடன், அதன் உரிமையாளருக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் எம்.எம். மீராசாஹிப் ஹலால்தீன் அவர்களின் வேண்டுகோளுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தை அகற்றுமாறு பிரதேச சபையினால் பலமுறை உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், அவர் அதனைப் புறக்கணித்து தொடர்ந்து வீதியோரத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக பொதுமக்களின் போக்குவரத்து, பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததை கருத்திற்கொண்டு, பொலிஸாரின் உதவியுடன் சட்டரீதியாக வாகனம் அகற்றப்பட்டதோடு, அதன் உரிமையாளருக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரமொன்றும் வெட்டி அகற்றப்பட்டது.
இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பிரதேச சபை தவிசாளர் எம்.எம். மீராசாஹிப் ஹலால்தீன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வீதியோரங்களில் நீண்டகாலமாக பயன்பாடின்றி கைவிடப்படும் அல்லது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் அனைத்து வகையான வாகனங்களும் முன்னறிவிப்பின்றி அகற்றப்படும் என்றும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் விதிப்பதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு, வீதி ஒழுங்கு மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை வீதியோரங்களில் நீண்டகாலம் நிறுத்தி வைப்பதைத் தவிர்த்து, அதற்கென ஒதுக்கப்பட்ட தரிப்பிடங்கள் அல்லது தனியார் வளாகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.




