ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியது; ஈரான் அதிரடி அறிவிப்பு.!!!
ஹார்முஸ் நீரிணையின் நுழைவாயில் பகுதியில் இன்று அதிகாலை அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படை அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை “சிக்கலான உளவு மற்றும் செயல்பாட்டு நடவடிக்கை” என ஈரான் வர்ணித்துள்ளது. கைப்பற்றப்பட்ட நீருக்கடிப் படகு உலகின் அதிநவீன நீருக்கடித் தொழில்நுட்பங்களில் ஒன்றைக் கொண்டுள்ளதாகவும், அது 2025ஆம் ஆண்டிலேயே அமெரிக்கக் கடற்படைக்கு வழங்கப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
‘Anduril Dive-LD’ எனப்படும் இந்த ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் சுமார் 6 மீற்றர் நீளமும், 3 தொன் எடையும் கொண்டதாகும். இது தொடர்ந்து 10 நாட்கள் வரை நீருக்கடியில் இயங்கக்கூடியதுடன், சுமார் 6,000 மீற்றர் ஆழம் வரை செயல்படும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டு அமெரிக்கக் கடற்படையின் ஆளில்லா நீருக்கடிப் பிரிவுக்காக இந்த வாகனம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, ஈரான் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் புகைப்படங்களில், வெள்ளை நிற உடலமைப்பைக் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் குறிப்பிடத்தக்க சேதங்கள் இன்றி காணப்படுவதாகவும், ஈரானிய துறைமுகம் ஒன்றில் பாதியளவு நீரில் மூழ்கிய நிலையில் கிரேன் கயிற்றுடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அமெரிக்காவின் தற்போதைய தலைமுறை நீருக்கடித் தொழில்நுட்ப சாதனங்களில் ஒன்றை ஈரான் முழுமையான நிலையில் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, போரின் ஆரம்பகட்டத்தில் இஸ்ரேலின் ‘Hermes 900’ ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் கைப்பற்றி, அதனை IRGC பொறியாளர்களிடம் ஆய்வுக்காக ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
மேலும், 2011ஆம் ஆண்டு ஈரான் கைப்பற்றிய அமெரிக்காவின் RQ-170 உளவு ஆளில்லா விமானமும் இதுவரை ஈரானின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
எனினும், Anduril Dive-LD போன்ற நவீன நீருக்கடிப் பயன்பாட்டு தொழில்நுட்பம் ஈரானின் வசம் சென்றுள்ளதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றத்திற்கு மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
