இறக்காமம் விவசாயிகளுக்கு நீதி கோரி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் உதுமாலெப்பை.!!!
அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேசத்தில் கடந்த 30 ஆண்டுகளாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள 21 விவசாயிகளின் காணிப் பிரச்சினையை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை இன்று நாடாளுமன்றத்தில் விசேட கேள்வியாக முன்வைக்கவுள்ளார்.
இன்று நடைபெறவுள்ள வாய்மூல விடைக்கான வினாக்களின் போது, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் கவனத்திற்கு இந்த விடயத்தை அவர் கொண்டுவரவுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவலடி வட்டை பகுதியில் 1986, 1989, 1991 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட காணிக் கச்சேரிகளின் அடிப்படையில், காணி ஆணையாளர் நாயகத்தின் அங்கீகாரத்துடன் அம்பாறை மாவட்டச் செயலகம் ஊடாக 21 விவசாயிகளுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும், குறித்த அனுமதிப் பத்திரங்கள் சட்டபூர்வமாக வழங்கப்பட்டிருந்த போதிலும், அம்பாறை மாவட்டச் செயலாளரின் பணிப்புரையின் பேரில் எனக் கூறி, இறக்காமம் பிரதேசச் செயலாளர் தொடர்ச்சியாக விவசாய நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுமார் 30 ஆண்டுகளாக விவசாயம் மற்றும் மேட்டுநிலச் செய்கைகளில் ஈடுபட்டு வந்த 21 விவசாயிகளும் கடுமையான பொருளாதார மற்றும் வாழ்வாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக உதுமாலெப்பை எம்.பி. சபையில் சுட்டிக்காட்டவுள்ளார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் காணிகளை மீள அடையாளம் கண்டு கையளிப்பதற்காக அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. பிரதேசச் செயலாளர் மற்றும் நில அளவையாளர் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய அந்தக் குழு சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்றபோது, வெளியாட்கள் சிலர் காணி கையளிப்பு நடவடிக்கைகளைத் தடுக்க முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அறிவாரா என்பதையும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களது காணிகளை எவ்வித தடையுமின்றி மீள வழங்குவதற்காக அமைச்சு மேற்கொள்ளவுள்ள அவசர நடவடிக்கைகள் என்ன என்பதையும் நாடாளுமன்றத்தில் அமைச்சர் தரப்பிடம் உதுமாலெப்பை எம்.பி. விளக்கம் கோரவுள்ளார்.