பாடசாலையில் குளவிக்கொட்டு; 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!!!
திருகோணமலை மாவட்டம், மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் இன்று (06) காலை இடம்பெற்ற திடீர் குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை நேரத்தில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குளவிக்கொட்டுச் சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




