முகநூல் நட்பால் ரூ.8.37 இலட்சம் மோசடி; போலி வெளிநாட்டு வைத்தியரின் வலையில் சிக்கிய பெண்.!!!
முகநூல் (Facebook) ஊடாக அறிமுகமான போலி வெளிநாட்டு வைத்தியர் அனுப்பியதாகக் கூறப்பட்ட பார்சலைப் பெற்றுத் தருவதாக நம்பவைத்து, பெண்ணொருவரிடம் ரூ.8 இலட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, கடந்த 13ஆம் திகதி லண்டனில் வசிக்கும் “டான்” என்ற பெயரில் தன்னை வைத்தியர் என அறிமுகப்படுத்திக்கொண்ட நபர், முகநூல் வழியாக குறித்த பெண்ணுடன் நட்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 16ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இயங்கும் பொதி விநியோக நிறுவனத்தைச் சேர்ந்தவர் எனத் தன்னை அறிமுகப்படுத்திய மற்றொருவர், லண்டனில் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பார்சல் வந்துள்ளதாகவும், அதனை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்க முதலில் ரூ.87,000 செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய பெண், கடந்த 17ஆம் திகதி குறித்த தொகையை வழங்கியதுடன், பின்னர் மேலும் ரூ.3 இலட்சம் தேவைப்படுவதாகக் கூறியதையும் செலுத்தியுள்ளார்.
அதன்பின்னர், பார்சலை விடுவிக்க மேலும் பணம் தேவைப்படுவதாகக் கூறப்பட்டதால், பெண்ணின் தாயாரும் ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் அதே வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார்.
இருப்பினும், மோசடி கும்பல் மேலும் ரூ.1 இலட்சம் மற்றும் பின்னர் ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் கோரியபோது, சந்தேகமடைந்த பெண் மேலதிக பணம் வழங்க மறுத்துள்ளார்.
அதன்பின், சம்பந்தப்பட்ட நபர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவர்களது தொலைபேசிகள் செயலிழக்கப்பட்டிருந்ததை அடுத்து, தாம் மோசடிக்குள்ளானதை உணர்ந்த பெண் மட்டக்களப்பு தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக அறிமுகமாகும் தெரியாத நபர்களை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என்றும், வெளிநாடுகளில் இருந்து பார்சல் வந்துள்ளது எனக் கூறி பணம் கோரும் நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.