ஈரானை அடிபணிய வைக்க போக்குவரத்துப் பாதைகளை முடக்க முயற்சி: அதிபர் பெசெஷ்கியன்.!!!
ஈரானை இராணுவ ரீதியாக பணிய வைக்க முடியாத நிலையில், அந்நாட்டையும் மக்களையும் அடிபணிய வைப்பதற்காக எதிர்தரப்பினர் போக்குவரத்துப் பாதைகளை முடக்குவதுடன் பல்வேறு சிக்கல்களை உருவாக்கி வருவதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அவர் வெளியிட்ட கருத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இராணுவ ரீதியாக நம்மைப் பணிய வைக்க முடியாததால், நமது தேசத்தையும் மக்களையும் அடிபணிய வைப்பதற்காக அவர்கள் போக்குவரத்துப் பாதைகளை முடக்குகின்றனர்.
தங்களால் இயன்ற இடங்களில் எல்லாம் பல்வேறு சிக்கல்களை உருவாக்கி வருகின்றனர். வான்வழி மற்றும் தரைவழிப் பாதைகளைத் தடுக்கவும், உள்நாட்டுப் பிளவுகளைத் தூண்டவும் அவர்கள் முயற்சிக்கின்றனர்.
மேலும், ஊடகங்களைப் பயன்படுத்துவதுடன், பல்வேறு இனக் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, நாட்டின் உள்ளக நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ளவும் அவர்கள் முயற்சிக்கின்றனர்.
நமக்குள்ள பலவீனங்களைப் பெருமளவில் பயன்படுத்தி, நாட்டை உள்ளிருந்தே பலவீனப்படுத்தி பணிய வைக்க அவர்கள் விரும்புகின்றனர்.
ஆனால், இறைவனின் அருளால், அவர்களின் இந்த அனைத்து முயற்சிகளையும் பயனற்றதாக்குவோம்” என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.