ஈரானின் அணுசக்தி திறன்கள் பெருமளவில் அழிப்பு: எஞ்சியுள்ள தளங்களையும் 10 நிமிடங்களில் அழிக்க முடியும் – ட்ரம்ப்.!!!
ஈரானின் அணுசக்தி திறன்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள ஒன்று அல்லது இரண்டு அணுசக்தி தளங்களையும் அமெரிக்காவால் வெறும் 10 நிமிடங்களில் அழிக்க முடியும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நிலத்தடியில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் ஈரானின் பிக்ஆக்ஸ் மவுண்டன் (Pickaxe Mountain) அணுசக்தி வளாகத்தைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த வளாகத்தையும் அமெரிக்காவால் மிகக் குறுகிய நேரத்தில் அழிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், ஈரானின் வாக்குறுதிகள் தொடர்பில் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஈரான் ஒப்பந்தங்களைச் செய்துகொண்ட பின்னர் அவற்றிலிருந்து பின்வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தைகளின் முடிவு எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.