பாதுகாப்பான புலம்பெயர்வு குறித்து மட்டக்களப்பில் முக்கிய கலந்துரையாடல் – நியூசிலாந்து அதிகாரி சந்திப்பு.!!!
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் மற்றும் நியூசிலாந்து நாட்டுக்கான முறைசாரா குடியேற்ற தொடர்பு அதிகாரி சொனியா டக்லஸ் (Sonia Douglas) ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (27) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கான தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றும் சொனியா டக்லஸ், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
இந்த சந்திப்பின் போது முறைசாரா புலம்பெயர்வினால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதேவேளை, பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் கல்வித் தகைமை மற்றும் திறன்களுக்கு ஏற்ப இலங்கை அரசாங்கம் உரிய சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் நியூசிலாந்து அதிகாரி சொனியா டக்லஸ் சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் கே. ரமணபிரசாத் மற்றும் ICMPD நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான புலம்பெயர்வை ஊக்குவிக்கும் வகையில் எதிர்காலத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



