கத்தார் அமீரைச் சந்தித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய; முன்னாள் அமீரின் மறைவுக்கு நேரில் இரங்கல்.!!!
கத்தாரின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்-தானி அவர்களின் மறைவுக்கு நேரில் இரங்கல் தெரிவிப்பதற்காக இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயமாக கத்தாருக்கு சென்றுள்ளார்.
இன்று (15) லுசைல் அரண்மனையில் கத்தார் அமீரான அதிமேதகு ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி அவர்களைச் சந்தித்த பிரதமர் ஹரிணி அமரசூரியவும், அவருடன் சென்றிருந்த இலங்கை உயர்மட்ட பிரதிநிதிகளும் முன்னாள் அமீரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பில் கத்தார் துணை அமீரான ஷேக் அப்துல்லா பின் ஹமத் அல்-தானி, பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானி உள்ளிட்ட கத்தார் அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களும் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இலங்கை மற்றும் கத்தார் இடையிலான நட்புறவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
