ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் – ட்ரம்ப்.!!!
உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை அமெரிக்கா தனது வசப்படுத்தும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை அமெரிக்கா ஏற்று நிர்வகிக்கத் தயாராக இருப்பதாகவும், அதனால் பயனடையும் நாடுகள் அந்தச் சேவைக்காக அமெரிக்காவிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ட்ரம்ப், “நாங்கள் அந்த நீரிணையை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். அதன் பாதுகாவலராக அமெரிக்கா செயல்படும். அதை ‘நீரிணையின் காவல் தேவதை’ (Guardian Angel) என்றும் அழைக்கலாம். ஆனால், அந்தச் சேவைக்காக எங்களுக்கு உரிய பணம் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “நாங்கள் அந்தப் பகுதியைப் பாதுகாப்போம். அதற்காக எங்களுக்குப் பெருமளவு நிதி கிடைக்க வேண்டும். இந்தச் சேவையால் பயனடையும் பல நாடுகள் மிகவும் செல்வந்த நாடுகளாகும். அவர்கள் அமெரிக்காவின் கூட்டாளிகளும் ஆவர். எனவே, இவ்வளவு முக்கியமான பாதுகாப்புப் பணியை எந்தப் பிரதிபலனும் இன்றி அமெரிக்கா மேற்கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது” என்றும் ட்ரம்ப் கூறினார்.