வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம: 32 பேர் உயிரிழப்பு – 700-க்கும் மேற்பட்டோர் காயம்; நாடு முழுவதும் அவசரநிலை அறிவிப்பு.!!!
வெனிசுலாவை வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.1 மற்றும் 7.5 ஆக பதிவான இந்த இரட்டை நிலநடுக்கத்தால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மத்திய மற்றும் கடலோரப் பகுதிகளை கடுமையாக தாக்கிய இந்த இயற்கை பேரிடரால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. குடியிருப்புகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவசர மீட்புக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
கராகஸ் நகரை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான அதிர்வுகளைத் தொடர்ந்து, வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாடு முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளார்.
இதனுடன், நாட்டின் முக்கிய சர்வதேச நுழைவாயிலாக விளங்கும் சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையத்தின் கட்டமைப்பில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் அனைத்து மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களும் உடனடியாக மருத்துவமனைகளுக்கு செல்லுமாறு அரசு அவசர அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

