லெபனான் போர் தொடர்ந்தால் அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் செல்லாது; ஈரான் கடும் எச்சரிக்கை.!!!
லெபனானில் நடைபெற்று வரும் போர் நிறுத்தப்படாத பட்சத்தில், அமெரிக்கா–ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது என ஈரான் ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரவல் துணைத் தலைவர் சையத் மெஹ்தி தபதபாயி எச்சரித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இன்று நடைபெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, சமூக ஊடகத் தளமான X-இல் பதிவிட்ட அவர், “லெபனானில் சியோனிச ஆட்சியின் தாக்குதல்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடருமானால், முழு ஒப்பந்தமும் செல்லுபடியாகாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா–ஈரான் இடையிலான ஆரம்பகட்ட அமைதி ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் மீறல்கள் தொடர்பான விவகாரத்தை, இன்று பிற்பகல் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஈரான் முன்வைக்கும் என, அந்நாட்டின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் பாகாயி தெரிவித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஈரானிய பிரதிநிதிகள் குழுவின் திட்டத்தின் படி, பேச்சுவார்த்தைகள் இன்று இரவு வரை தொடரும் என்றும், அதற்கு அப்பால் அவை நீடிக்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், அக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஈரான் அணுகுண்டுகளை விரும்பவில்லை என்பதை நாட்டின் முன்னாள் உச்ச தலைவர் பலமுறை தெளிவுபடுத்தியிருந்தார்” என்றார்.
“எங்களிடம் அணுகுண்டு இல்லை என்பதுதான் அமெரிக்காவின் முக்கிய கவலையாக உள்ளது. அணுகுண்டு எமக்கு தேவையில்லை என்று எமது தலைவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதை எழுத்து மூலமாக உறுதிப்படுத்துமாறு அமெரிக்கா கேட்டதையடுத்து, அதற்கும் நாம் ஒப்புதல் வழங்கியுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
லெபனான் போர்நிலவரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல், அமெரிக்கா–ஈரான் உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தைகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.