உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்க மூன்றாம் இடத்திற்கு முன்னேற்றம்.!!!
உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் இலங்கையின் முன்னணி தடகள வீரர் ருமேஷ் தரங்க அபார முன்னேற்றம் கண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ரோம் டயமன்ட் லீக் தொடரில் 92.62 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்ததைத் தொடர்ந்து, அவரது தரநிலைப் புள்ளிகள் 1,324 ஆக உயர்ந்துள்ளன. இதன் மூலம் உலக தரவரிசையில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் மற்றும் கிரெனடாவின் அன்டர்சன் பீட்டர்ஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
உலகத் தரவரிசையில் மிக வேகமாக முன்னேற்றம் கண்ட வீரராக விளங்கும் தரங்க, முதல் 20 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ள இளம் ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மேலும், ஆசியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக உயர்ந்துள்ள அவர், இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியன் நீராஜ் சோப்ராவையும் தரவரிசையில் பின்தள்ளியுள்ளார்.
ரோம் டயமன்ட் லீக் போட்டியில் பெற்ற வெற்றி, அவரது முதல் டயமன்ட் லீக் வெற்றியாக அமைந்ததுடன், புதிய போட்டிச் சாதனை மற்றும் இலங்கை தேசிய சாதனையையும் பதிவு செய்ய உதவியது. இதன் மூலம் நடப்பு பருவத்தில் உலகின் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய ஈட்டி எறிதல் வீரராகவும் அவர் திகழ்கிறார்.
அத்துடன், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் தங்கப் பதக்கம் வென்ற பின்னர், 92 மீற்றர் தூரத்தைத் தாண்டிய ஒரே வீரர் என்ற அரிய சாதனையையும் ருமேஷ் தரங்க படைத்துள்ளார்.
இலங்கை தடகள வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதியுள்ள ருமேஷ் தரங்க, உலக அரங்கில் நாட்டின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளார்.