ஈரான் விவகாரத்திற்கு இராஜதந்திரத் தீர்வே அவசியம் – கத்தார் வெளியுறவு அமைச்சர்.!!!
ஈரான் தொடர்பான தற்போதைய பதற்றமான சூழ்நிலைக்கு இராஜதந்திர ரீதியிலான தீர்வே நிலையான வழி என கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஈரான் கத்தாரின் அண்டை நாடு என்பதால் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் நிலவுவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அவை கத்தாருக்கு மட்டுமல்லாது வளைகுடா நாடுகளில் உள்ள சகோதர நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர அணுகுமுறையே சிறந்த வழி என அவர் வலியுறுத்தினார்.
போர் மற்றும் மோதல்களுக்கு பதிலாக, வளைகுடா நாடுகளுடன் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும், பரஸ்பர நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட செழிப்பான வளைகுடாப் பிராந்தியத்தையும், முன்னேற்றம் காணும் ஈரானையும் காண விரும்புவதாக கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்தார்.