ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரான் நடவடிக்கை: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு.!!!
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடியாக உலக எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கைகளை ஈரான் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பதற்றமான சூழ்நிலையின் தாக்கமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (11) வேகமாக உயர்வடைந்துள்ளது.
சர்வதேச அளவில் எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் முக்கிய குறியீடான பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெயின் விலை 2.47 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 95.40 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது ஒரு பீப்பாய்க்கு 2.30 டொலர் அதிகரிப்பைக் குறிக்கிறது.
அதேவேளை, அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) கச்சா எண்ணெய் விலையும் 2.89 சதவீதத்தால் உயர்ந்து, ஒரு பீப்பாய் 92.63 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இது 2.60 டொலர் உயர்வாகும்.
ஹோர்முஸ் நீரிணை உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியின் முக்கிய கடற்பாதையாகக் கருதப்படுவதால், அங்கு ஏற்படும் எந்தவொரு பதற்றமும் சர்வதேச எரிசக்தி சந்தையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ மற்றும் அரசியல் பதற்ற நிலை தொடர்ந்தால், எதிர்வரும் நாட்களில் எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.