ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: ஹோர்முஸ் நீரிணை மூடல் அபாயம் அதிகரிப்பு.!!!
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை எந்த உடன்படிக்கையும் இன்றி முடிவடைந்துள்ளதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சுமார் 21 மணிநேரம் நீடித்த இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில், ஈரானிய பிரதிநிதிகள் வொஷிங்டனின் முக்கிய நிபந்தனைகளை ஏற்க மறுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்பதற்கான “உறுதியான வாக்குறுதி” ஒன்றை அமெரிக்கா கோரியிருந்தது. எனினும், இந்த நிபந்தனையை ஈரான் ஏற்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் கோரிக்கைகள் நியாயமற்றவை என்றும், அவை பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்ததாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
பேச்சுவார்த்தை எந்த முடிவும் இன்றி நிறைவடைந்ததையடுத்து, அமெரிக்கத் தூதுக்குழு வொஷிங்டனுக்கு திரும்பியுள்ளது. இதனிடையே, ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதால், உலக எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் அபாயம் இருப்பதாக சர்வதேச கவலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில், இந்த பேச்சுவார்த்தையின் முடிவு தமக்கு “பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை” என்றும், ராணுவ ரீதியாக அமெரிக்கா ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.