தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை ஜன்னல் வழியாக வீசிய இளம்பெண் – அதிர்ச்சி சம்பவம்.!!!
இந்தியாவில் இடம்பெற்றுள்ள மனிதநேயத்தையே உலுக்கும் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் ஆகாத 19 வயது இளம்பெண் ஒருவர், தனது கர்ப்பத்தை குடும்பத்தினருக்குக் கூட தெரியப்படுத்தாமல் மறைத்து வைத்ததுடன், இறுதியில் தனக்குத் தானே பிரசவம் பார்த்து, பிறந்த குழந்தையை கழிப்பறை ஜன்னல் வழியாக வெளியே வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களின் படி, பிளஸ் டூ கல்வியை முடித்த பின்னர் ரேடியோகிராஃபி படித்து வந்த இளம்பெண், தாம் கர்ப்பமாக இருப்பதை மிகவும் ரகசியமாக வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் அவர் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது மருத்துவ ஊழியர்களிடம் “இது மாதவிடாய் வயிற்று வலி தான், வலி நிவாரண மாத்திரை வேண்டும்” என கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அவரது அசாதாரணமான வலியும் நடத்தை மாற்றங்களும் காரணமாக மருத்துவர்களுக்கு கர்ப்பம் தொடர்பான சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், பரிசோதனை செய்ய அவர் அனுமதி வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இரவு நேரத்தில் மருத்துவமனை கழிப்பறையிலிருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதையடுத்து சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மருத்துவ ஊழியர்கள் அவசரமாக அங்கு சென்று பார்த்தபோது, கழிப்பறையில் பிரசவம் நடைபெற்றதற்கான அடையாளங்கள் காணப்பட்டதுடன், கழிப்பறை ஜன்னலுக்கு வெளியே புதிதாகப் பிறந்த குழந்தை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக மீட்கப்பட்ட குழந்தைக்கும் இளம்பெண்ணிற்கும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முழுமையாக வளர்ச்சியடைந்த பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையின் தொப்புள் கொடியை இளம்பெண் தானே துண்டித்திருக்கலாம் என்ற ஆரம்பக்கட்ட தகவல்கள் இருப்பதாக மருத்துவமனை சூப்பிரண்டு டாக்டர் அருண் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், குழந்தையின் எதிர்கால பாதுகாப்பு, இளம்பெண்ணின் மனநிலை மற்றும் சம்பவத்தின் பின்னணி உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ள இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் விவாதத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.